இரண்டு வருடங்களுக்கு முன்பு கலிங்கத்துப் பரணி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் ரசித்த சில பாடல் வரிகளை புதுக்கவிதையாக்க முயன்றேன். இதோ...
கனவினில் ஊடல்
கொண்டதென்று
காலையில் மனத்தொடுச்
சண்டையிடுவாய்
உனைப்பற்றியிருக்கும்
தாவணியை நான் பற்ற
நின்ற இடத்தில நின்று
விட்டு விடு என்பாய்
குழம்பிப்போவோம்
நானும் தாவணியும்
கனவில் என்
கை பட்ட இடங்களில்
காலையில் தேடுவாய்
நகங்களின் காலடிகளை
உண்மை எனும்படி
ஒரு பொய்த்தூக்கம் போடுவாய்
எழுப்பும் நோக்கத்தில்
இடையில் கை வைத்தாலோ
இன்னும் கொஞ்சம் இயல்பாய் நடிப்பாய்
உடையில் ஒரு கை ஓய்வெடுக்க
குழல் மறு கையில் ஓய்வெடுக்க
உறங்கும்போதே
தோன்றுவாய் அழகாக
எனில்
எழுந்து நீ நடந்தால் ...
பஞ்சத்தில் உழன்றவன் பெற்ற
பணக்குவியல் போல
யாருமில்லா இடத்தில்
பார்த்து மகிழ்வாய்
இரவின் குறிகளை
பொல்லாத கோபம் தீர்ந்து
புன்னகை சிந்தும்போது
கண்களில் இயற்றுவாய்
துளி கண்ணீர்க் கவிதையை.