விதி (Fate)

விதி (Fate)

வாழ்க்கை ஏதோ நமக்குப் புரியாத அதே சமயம் முன்பே முடிவு செய்யப்பட்ட ஒரு பாதையில் போவதாக நம்மில் பெரும்பாலானவர்கள் உணர்கிறோம். முன்பே முடிவு செய்யப்பட்டது என்றால் அதுதான் விதியா? 

விதி....
எத்தனை அர்த்தங்கள் கொண்டது இந்த வார்த்தை?

விதி: 
1. Fate 
2. Rule 
3. Order
மேலும் பல ...

ஏன் நாம் எப்போதும் விதியை Fate என்ற ஒரே அர்த்தத்தில் கொள்ள வேண்டும்?
இயற்கையில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு விதி(rule)க்கு உட்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, விதி (Fate) என்பதும்  ஏதோ ஒரு விதி (Rule)-க்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்.

இந்த இரண்டாம் விதி மிகவும் எளிமையானது. தீர்க்கமான முடிவெடுக்கும் திறமையும் எடுத்த முடிவுகளில் கவனம் சிதறாமல் தொடர்ந்து சென்றால் முதல் விதி நமக்குச் சாதகமாக வேலை செய்யத் தொடங்கிவிடுகிறது.

இயற்கை தன் விதியை எக்காலத்திலும் மீறியதில்லை. எனவே, விதி என்ற ஒன்று நிச்சயம் உள்ளது. அதனை நமக்கு உதவ   வைப்பது நம் கையில் உள்ளது...

அங்காடித் தெரு







ரங்கநாதன் தெரு... எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு இடம். 'பிழைத்துக்கொள்ளலாம்' என்பது மூன்று வேளை முழுதாக சாப்பிடுவது. இதைக் கொஞ்சம் தெளிவாகவே காட்டும் படம்தான் அங்காடித் தெரு.


படிப்பில் திறமை இருந்தும் வசதி இல்லாததாலும் தந்தையின் இழப்பினாலும் ஒரு மாணவனின் வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதே கதை.  


எளிமையான கதை மட்டுமல்ல மிகவும் பொதுவான மற்றும் உண்மையில் நடக்கும் கதையும் கூட. ரங்கநாதன் தெருவில் பெரும்பாலான கடைகளில் நாம் பதினெட்டு வயதிற்கும் குறைவான வயதுடைய சிறுவர் சிறுமிகளை நிச்சயம் பார்க்கலாம். ஆனால் அவர்களை விசாரித்தால் அவர்கள் இருபதை ஒட்டிய ஏதோ ஒரு வயதைச் சொல்வார்கள்அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் உத்தரவின் படி. சிரித்துக் கொண்டே வேலை பார்த்தாலும் அதில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோகம் கண்டிப்பாக இருக்கும்.



 "அப்பா அம்மா இல்லாத பையனாஅக்கா தங்கச்சி நிறைய இருக்கிற பையனா பாத்து எடு. அப்பதான் சொல்றத கேட்டுகிட்டு பேசாம வேலை பாப்பான்" என்ற வசனம் எனக்கு சென்னை கிண்டியில் இருந்த ஒரு BPO நிறுவனத்தை ஞாபகப்படுத்தியது. அந்நிறுவனத்தின் Recruitment strategy: அங்கு ஒரு சில பணிகளுக்கு நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த, சுமாரான திறமை உடையவர்கள் என்று அவர்கள் நம்பக்கூடிய அதிலும் குறிப்பாக பெண்களை அதிகமாக தேர்ந்தெடுப்பார்கள். அடுத்தடுத்த வருடங்களில் அங்கு வேலை கொடுத்ததே நாம் பெற்ற பிறவிப் புண்ணியம் போல அவர்களை நடத்துவார்கள். பல நிறுவனங்களுக்கு மனிதர்களும் 'கம்பெனி' லாபம் பார்க்க உதவும் ஒரு கருவி. படித்தவர்கள் நிரம்பிய இடம் என்பதாலும் சட்டங்களுக்கு உட்பட்டே நடக்க முடியும் என்பதாலும் பல இடங்களில் பெரிய பாதிப்பில்லை. ஆனால் படிப்பு குறைவாகவும் போதிய வெளிப்பழக்கங்கள் இல்லாதவர்களும் படும் பாட்டை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.      


 "பையன் அவர மாதிரியே இருக்கான் பாய்! " என்று ஊனமுற்ற குழந்தையை காட்டி மகிழும் பெண் நம் சமூகத்தின் பார்வைக்குறைபாட்டை சுட்டிக் காட்டுகிறார்.  
இயக்குனர் வசந்தபாலன், ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக அமைத்திருக்கிறார். ஒரு அறிமுகம், தேவையைப் பொறுத்து விரிவாக்கம், ஒரு முடிவு, என கேரக்டரை நன்கு வடிவமைத்திருக்கிறார். கதையிலும் அதன் மனிதர்களிலும் நாம் ஊன்றி விடுவதால் சுமாரான இசை ஒரு குறையாகத் தெரியவில்லை. "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" ஒரு சிறந்த கவிதை, நா. முத்துக்குமாரினுடையது. சோகமான படம் என்றபோதும் சுறுசுறுப்பாகவே போகிறது. 


கால்களை இழந்துவிட்டாள் என்றபோதும் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதாக ஹீரோ எடுக்கும் முடிவுக்கு தியேட்டர் (சென்னை PVR) முழுவதும் விசில் சத்தம். 


தெருவில் நின்று பொருள் விற்பவர்களை நிச்சயம் இனிமேல் அலட்சியமாக கடந்து செல்ல முடியாது. 

காலம்

இப்போதெல்லாம்
பெருமூச்சு விடாமலே
கடக்க முடிகிறது
அந்த ரயில் நிலையத்தையும்
மண மண்டபத்தையும்

அவள் குழந்தைக்கு
அநேகமாக ஒரு வயதிருக்கும். 

Stone wheel in Pazhayarai

Pazhayarai inside


Pazhayarai inside
Originally uploaded by sekarkraj

As old as.....


As old as ...
Originally uploaded by sekarkraj
Pazhayarai, is the ancient capital of Chola empire. This one is taken from the temple in Pazhayarai.

ஸ்ரீமான் சுதர்சனம்

சமீபத்தில் நான் ரசித்துப் படித்த ஒரு புத்தகம், ஸ்ரீமான் சுதர்சனம். மறைந்த திரு. தேவன் அவர்களால் எழுதப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு (அல்லது அதற்கும்) முன்பு எழுதப்பட்டது . தேவன் அவர்களைப் பற்றி தெரியாதவர்களுக்கு:  "துப்பறியும் சாம்பு", எனும் கதாபாத்திரம் உங்களுக்கு பரிச்சயமானதாயிருந்தால் தேவனும் உங்களுக்கு பரிச்சயமானவர்தான். தேவனின் மிகச்சிறந்த ஒரு படைப்பு, "துப்பறியும் சாம்பு". தேவன் பொதுவாகவே நகைசுவைக்குப் பெயர் பெற்றவர். இந்த வருட புத்தகக்கண்காட்சியில் தேவனின் பல படைப்புகளை காண முடிந்தது (நன்றி: கிழக்கு பதிப்பகம்). நீண்ட நாட்களாகவே இவருடைய புத்தகங்களுக்காக காத்திருந்தேன் என்பதால் இருந்தவற்றுள் என்னைக்கவர்ந்த "ஸ்ரீமான் சுதர்சனத்தை" வாங்கினேன். படிக்கும்போதுதான் உணர்ந்தேன், தேவனின் மற்ற புத்தகங்களையும் வாங்கி வராத என் தவறை.

"குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் - இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?" இந்தக் குறிப்பே என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் புத்தகத்தின் வயது என் வயதைக் காட்டிலும் இரண்டு மடங்கு இருக்கும். ஆனால் இதைப் படிக்கும்போது இவ்வளவு பழைய புத்தகத்தைப் படிக்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கூடத் தோன்றவில்லை. ஒரே காரணம் இதில் விளையாடியிருக்கும் நகைச்சுவை. ஒரு தனியார் அலுவலகத்தில் குமஸ்தாவாக வேலை பார்க்கும் சுதர்சனம் தன் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக தவறுகள் செய்ய முற்படுவதும், ஆனால் அதன் பிறகு அதற்காக உள்ளுக்குள் பயந்து நடுங்குவதும் நம்மை நிஜமாகவே சிரிக்க வைக்கின்றன. குருதிப்புனல் படததில் வரும் மிடில் க்ளாஸ் மனசாட்சி பற்றிய காடசி நினைவுக்கு வருகிறது.

ஒரு தவறு செய்பவன்  மேலும் மேலும் தவறுகள் செய்ய அவனுடைய முதல் தவறும் மற்ற சூழ்நிலைகளும்  எந்த அளவுக்கு காரணமாகின்றன என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறார், ஆசிரியர்.  மற்றபடி கோள் மூட்டும் பக்கத்து மேஜைவாசி, பந்தா பேர்வழி, வேலை செய்யாமல் நேரம் ஓட்டுபவர் போன்ற மற்ற விஷயங்களுக்கும் எந்தக் குறையுமில்லை.  

மற்றவர் குறித்த மனிதர்களின் மனநிலை என்பது காலத்தைப் பொறுத்து ஒன்றும் பெரிய அளவில் மாறிவிடாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த புத்தகம். வாடகைக்கு வீடு பார்ப்பதும் பிறகு அங்கு குடியேறுவதுமான அந்த நிகழ்வுகள் நிஜமாகவே நம்மை யோசிக்க வைக்கின்றன.

பொருட்களைக் கொடுத்து விட்டால் பணத்தை நிச்சயம் கறந்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே கடனுக்கு பொருட்கள் தரும் அந்த பக்கத்துக்கு வீடு அம்மா இந்த நாட்களின் கிரெடிட் கார்ட்-களை ஞாபகப்படுத்துகிறார்.

கொஞ்சம் பழைய காலத்தை உணர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தவிர, மற்றபடி மிகவும் படிக்கத்தகுந்த புத்த்தகம்.