வருத்தம்

எதிர் வீட்டில் துக்கம்
சோகத்தில் நான்

இன்னும் திரும்பவில்லை
யாரோ எடுத்துச்சென்ற
என் வீட்டு வாகனம்.

வருகைப்பதிவேடு (!)

வருவோரின் எண்ணிக்கை
வசதியாய்க் குறிக்கப்படுகிறது
கோயில் தூண்களில்
குங்குமதீற்றலாக. (01.04.2004)
சகஜமாய்ப்பயணித்துக்கொண்டிருக்கும்
நெடுஞ்சாலையில்
திடுமென குறுக்கிடும்
ஆட்டுக்குட்டியாய்
எதையோ தேடுகையில்
புத்தகத்திலிருந்து விழுகிறது
உன் புகைப்படம். (2003-ல்)

வலி(மை)

எறும்பை நசுக்க
முற்படும்போதெல்லாம்
ஞாபகத்தில் தோன்றுகிறது
மதம் பிடித்த யானை. (எழுதியது 22. 02.2003 இல்)

என் தோழிக்கு....

உன்னைக் காணாமலே
இருந்திருந்தால்
நான் நானாகவே இருந்திருப்பேன்
வைரமாய் இருந்தும்
பட்டைத் தீட்டப்படாமல்.

முதல் எழுத்து (initial)

சிப்பியை மறந்துவிட்டு
மழைத்துளிக்கு மரியாதை.


 இதுவே என் முதல் கவிதை (அல்லது சிந்தனை). சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியது.