சமீபத்தில் நான் ரசித்துப் படித்த ஒரு புத்தகம், ஸ்ரீமான் சுதர்சனம். மறைந்த திரு. தேவன் அவர்களால் எழுதப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு (அல்லது அதற்கும்) முன்பு எழுதப்பட்டது . தேவன் அவர்களைப் பற்றி தெரியாதவர்களுக்கு: "துப்பறியும் சாம்பு", எனும் கதாபாத்திரம் உங்களுக்கு பரிச்சயமானதாயிருந்தால் தேவனும் உங்களுக்கு பரிச்சயமானவர்தான். தேவனின் மிகச்சிறந்த ஒரு படைப்பு, "துப்பறியும் சாம்பு". தேவன் பொதுவாகவே நகைசுவைக்குப் பெயர் பெற்றவர். இந்த வருட புத்தகக்கண்காட்சியில் தேவனின் பல படைப்புகளை காண முடிந்தது (நன்றி: கிழக்கு பதிப்பகம்). நீண்ட நாட்களாகவே இவருடைய புத்தகங்களுக்காக காத்திருந்தேன் என்பதால் இருந்தவற்றுள் என்னைக்கவர்ந்த "ஸ்ரீமான் சுதர்சனத்தை" வாங்கினேன். படிக்கும்போதுதான் உணர்ந்தேன், தேவனின் மற்ற புத்தகங்களையும் வாங்கி வராத என் தவறை.
"குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் - இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?" இந்தக் குறிப்பே என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தப் புத்தகத்தின் வயது என் வயதைக் காட்டிலும் இரண்டு மடங்கு இருக்கும். ஆனால் இதைப் படிக்கும்போது இவ்வளவு பழைய புத்தகத்தைப் படிக்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கூடத் தோன்றவில்லை. ஒரே காரணம் இதில் விளையாடியிருக்கும் நகைச்சுவை. ஒரு தனியார் அலுவலகத்தில் குமஸ்தாவாக வேலை பார்க்கும் சுதர்சனம் தன் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக தவறுகள் செய்ய முற்படுவதும், ஆனால் அதன் பிறகு அதற்காக உள்ளுக்குள் பயந்து நடுங்குவதும் நம்மை நிஜமாகவே சிரிக்க வைக்கின்றன. குருதிப்புனல் படததில் வரும் மிடில் க்ளாஸ் மனசாட்சி பற்றிய காடசி நினைவுக்கு வருகிறது.
ஒரு தவறு செய்பவன் மேலும் மேலும் தவறுகள் செய்ய அவனுடைய முதல் தவறும் மற்ற சூழ்நிலைகளும் எந்த அளவுக்கு காரணமாகின்றன என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறார், ஆசிரியர். மற்றபடி கோள் மூட்டும் பக்கத்து மேஜைவாசி, பந்தா பேர்வழி, வேலை செய்யாமல் நேரம் ஓட்டுபவர் போன்ற மற்ற விஷயங்களுக்கும் எந்தக் குறையுமில்லை.
மற்றவர் குறித்த மனிதர்களின் மனநிலை என்பது காலத்தைப் பொறுத்து ஒன்றும் பெரிய அளவில் மாறிவிடாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த புத்தகம். வாடகைக்கு வீடு பார்ப்பதும் பிறகு அங்கு குடியேறுவதுமான அந்த நிகழ்வுகள் நிஜமாகவே நம்மை யோசிக்க வைக்கின்றன.
பொருட்களைக் கொடுத்து விட்டால் பணத்தை நிச்சயம் கறந்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே கடனுக்கு பொருட்கள் தரும் அந்த பக்கத்துக்கு வீடு அம்மா இந்த நாட்களின் கிரெடிட் கார்ட்-களை ஞாபகப்படுத்துகிறார்.
கொஞ்சம் பழைய காலத்தை உணர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தவிர, மற்றபடி மிகவும் படிக்கத்தகுந்த புத்த்தகம்.