அங்காடித் தெரு







ரங்கநாதன் தெரு... எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு இடம். 'பிழைத்துக்கொள்ளலாம்' என்பது மூன்று வேளை முழுதாக சாப்பிடுவது. இதைக் கொஞ்சம் தெளிவாகவே காட்டும் படம்தான் அங்காடித் தெரு.


படிப்பில் திறமை இருந்தும் வசதி இல்லாததாலும் தந்தையின் இழப்பினாலும் ஒரு மாணவனின் வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதே கதை.  


எளிமையான கதை மட்டுமல்ல மிகவும் பொதுவான மற்றும் உண்மையில் நடக்கும் கதையும் கூட. ரங்கநாதன் தெருவில் பெரும்பாலான கடைகளில் நாம் பதினெட்டு வயதிற்கும் குறைவான வயதுடைய சிறுவர் சிறுமிகளை நிச்சயம் பார்க்கலாம். ஆனால் அவர்களை விசாரித்தால் அவர்கள் இருபதை ஒட்டிய ஏதோ ஒரு வயதைச் சொல்வார்கள்அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் உத்தரவின் படி. சிரித்துக் கொண்டே வேலை பார்த்தாலும் அதில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோகம் கண்டிப்பாக இருக்கும்.



 "அப்பா அம்மா இல்லாத பையனாஅக்கா தங்கச்சி நிறைய இருக்கிற பையனா பாத்து எடு. அப்பதான் சொல்றத கேட்டுகிட்டு பேசாம வேலை பாப்பான்" என்ற வசனம் எனக்கு சென்னை கிண்டியில் இருந்த ஒரு BPO நிறுவனத்தை ஞாபகப்படுத்தியது. அந்நிறுவனத்தின் Recruitment strategy: அங்கு ஒரு சில பணிகளுக்கு நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த, சுமாரான திறமை உடையவர்கள் என்று அவர்கள் நம்பக்கூடிய அதிலும் குறிப்பாக பெண்களை அதிகமாக தேர்ந்தெடுப்பார்கள். அடுத்தடுத்த வருடங்களில் அங்கு வேலை கொடுத்ததே நாம் பெற்ற பிறவிப் புண்ணியம் போல அவர்களை நடத்துவார்கள். பல நிறுவனங்களுக்கு மனிதர்களும் 'கம்பெனி' லாபம் பார்க்க உதவும் ஒரு கருவி. படித்தவர்கள் நிரம்பிய இடம் என்பதாலும் சட்டங்களுக்கு உட்பட்டே நடக்க முடியும் என்பதாலும் பல இடங்களில் பெரிய பாதிப்பில்லை. ஆனால் படிப்பு குறைவாகவும் போதிய வெளிப்பழக்கங்கள் இல்லாதவர்களும் படும் பாட்டை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.      


 "பையன் அவர மாதிரியே இருக்கான் பாய்! " என்று ஊனமுற்ற குழந்தையை காட்டி மகிழும் பெண் நம் சமூகத்தின் பார்வைக்குறைபாட்டை சுட்டிக் காட்டுகிறார்.  
இயக்குனர் வசந்தபாலன், ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக அமைத்திருக்கிறார். ஒரு அறிமுகம், தேவையைப் பொறுத்து விரிவாக்கம், ஒரு முடிவு, என கேரக்டரை நன்கு வடிவமைத்திருக்கிறார். கதையிலும் அதன் மனிதர்களிலும் நாம் ஊன்றி விடுவதால் சுமாரான இசை ஒரு குறையாகத் தெரியவில்லை. "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" ஒரு சிறந்த கவிதை, நா. முத்துக்குமாரினுடையது. சோகமான படம் என்றபோதும் சுறுசுறுப்பாகவே போகிறது. 


கால்களை இழந்துவிட்டாள் என்றபோதும் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதாக ஹீரோ எடுக்கும் முடிவுக்கு தியேட்டர் (சென்னை PVR) முழுவதும் விசில் சத்தம். 


தெருவில் நின்று பொருள் விற்பவர்களை நிச்சயம் இனிமேல் அலட்சியமாக கடந்து செல்ல முடியாது. 

காலம்

இப்போதெல்லாம்
பெருமூச்சு விடாமலே
கடக்க முடிகிறது
அந்த ரயில் நிலையத்தையும்
மண மண்டபத்தையும்

அவள் குழந்தைக்கு
அநேகமாக ஒரு வயதிருக்கும்.